Royalblacksandy's Blog

February 6, 2011

முக்கிய செய்திகள்…

Filed under: unimaginable — royalblacksandy @ 4:09 pm

வரவு அஞ்சு லட்சம் செலவு ஐநூறு உயிர்

புதுபோட் வாங்கினதுக்கு ஒரு லட்சம்

மூணு மாசத்தில் அறுந்த வலைகளுக்கு

மொத்த செலவு அம்பதாயிரம்

பெரியக்கா கல்யாணக் கடன் ரெண்டு லட்சம்

ரெண்டு பேருக்கும் கான்வண்ட் ஸ்கூல் பீஸ் எட்டாயிரம்

போட்டோக்கு மாலை போட்ட பெரிய மனுசங்களுக்கு

கறிசோறு ரெண்டாயிரம்,காபி டீ ஐநூறு

கலைஞர் டிவி கேபிளுக்கு மாசம் இருநூறு

பட்டியல் வளர்ந்துகொண்டே இருந்தது

“கருவாட்டை கொண்டுபோய் விக்க சொன்னேன்ல”

அம்மா கோவத்துடன் முதுகில் அடித்ததில்

நழுவி விழுந்த பென்சில் ரெண்டாய் உடைந்தது

அப்பா அடிக்கடி சொல்வாரு தலையிலடிச்சிகிட்டே

“இந்த தொழிலுக்கு வராதீங்கடா படிச்சி வேலக்கி போங்க”

ஹ்ம்ம் அவரு அங்கேருந்து பாப்பாரா?

முணுமுணுத்துக் கொண்டே கூடையை தூக்கியவள்

உடைஞ்ச பென்சிலுக்கு அஞ்சு ருபாய் சேர்க்கவே இல்லை.

.

வானவில்லில் சாயம் வெளுத்திருந்தது

கவிஞன் எழுதினான் நீல வான ஓடை

தலைவர்கள் சொன்னாங்க கருப்பு சரித்திரம்

ரேஷன் அரிசியோ பழுப்பு  மஞ்சள்

தரைய ஒதைச்சு அழுத கால்கள் கொஞ்சம் சிவப்பு

மௌனமா பாக்கும் சாமிகளோ காவி உடுத்திருக்கு

இந்தியனோட இறையாண்மை நிறமில்லாம படுத்திருக்கு

பச்சை தமிழனோட சவம் மட்டும் தனிச்சிருக்கு

அவன் நட்பு மீனும் செத்து வாய திறந்திருக்கு.

ஒரு வேண்டுகோள்:

இதெல்லாம் செய்தால் நிலைமை திருந்திவிடுமா என்பவர்கள் முதலில் இது புரட்சி அல்ல தகவல் பரிமாற்றம்,மௌன எதிர்ப்பு என புரிந்து கொள்ள வேண்டும்..நமது மௌனம் மட்டுமே இவர்களை எதை பற்றியும் சிந்திக்காமல் சுயசேவை செய்ய வைக்கிறது.உங்கள் குடும்பத்தார்க்கு சொல்லுங்கள் இதுவரை 500 பேர் உயிரிழந்தனரென்று.நேரம் இருந்தால் ஒரு அரை நொடி அந்த பெட்டிஷனில் கையெழுத்திடுங்கள்.இப்போது சமூக வலைப்பக்கங்களில் நடப்பது ஆரோக்கியமானது.முடிந்தால் உங்கள் (fb,twitter,orkut,blog) வலைப்பக்க ஸ்டேட்டசில்  இது தொடர்பான செய்தி தந்து தெரியாதவர்களுக்கு பகிருங்கள்.எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் மீனவ மரணங்களை, ஆட்சியாளர்கள் அறியட்டும் நாம் வெறுக்கிறோம் என.செய்திகளில் இதற்கு மீடியா போதிய முக்கியத்துவம் அளிக்காததால் நாமே இதை செய்தியாக்கும் விஷயம். செய்தி என்றால் கெட்டவார்த்தை போன்ற தோற்றத்தை துடைத்து தெரியவேண்டியதை செய்தியாக்குவோம்

January 26, 2011

ET-Extra Terrestrial-Revision

Filed under: Uncategorized — royalblacksandy @ 4:43 pm
Tags: , , ,

             

            ஒரு திரைப்படம் எப்படி இருக்க வேண்டும்?P.C.Sriram சொன்னதாக நினைவு, “ஒரு நல்ல திரைப்படம் உங்கள் தூக்கத்தை தொந்தரவு செய்ய வேண்டும்”.

            விகடனில் வந்த தொடர்களில் கற்றதும் பெற்றதும்,ஓ பக்கங்கள் வரிசையில் பிடித்தது செழியனின் உலக சினிமா.நிறைய நல்ல படங்களைப்பற்றி சொல்லி இருப்பார்.அதில் நான் குறித்து வைத்துக்கொண்டவை ET-Extra terrestrial,Run Lola Run மற்றும் The Birds.இதில் ஈடி சென்ற வாரம்தான் பார்க்க கொடுத்து வைத்திருந்தது.நிற்க.அந்த தொடர் வந்து நிறைய நாட்களாச்சே என்பவர்கள் சில மாதங்களாகவே நான் GirlFlicksManiaவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.கூகிளில் சிறந்த GirlFlicksஐ தேடி தரவிறக்கம் செய்து பார்ப்பதை வார இறுதி வாடிக்கையாகவே வைத்திருந்தேன்(கேர்ள் ஃப்ளிக்ஸ்-காதலை மையப்படுத்தி அல்லது பெண்களை மையப்படுத்தி மொத்தத்தில் பெண்களால் இரசிக்கப்படும் ஆண்களால் அசட்டை செய்யப்படும் படங்கள்).எல்லா படங்களும் பார்த்தாகிவிட்ட ஒரு நல்லநாளில் ஈடியை தரவிறக்கினேன்.(அழகாக இருக்கிறது இந்த வார்த்தை!)

               ஒரு அயல்கிரகவாசி பூமியில் தவறுதலாக தனித்துவிடப்படுகிறது(நெருக்கம் கருதி அஃறிணை).Elliot தந்தையை பிரிந்த தாயால் வளர்க்கப்படும் சிறுவன்.சதா அண்ணன் அவனை எஜமானத்தனம் செய்கிறான் சரியாக சொல்வதென்றால் அண்ணன் மற்றும் அவன் நண்பர்களிடம் ஒப்புக்கு சப்பாணியாக இருக்கிறான்.சிறுவயதில் மாயாஜாலக் கதைகளில் ஈர்ப்பு வருகையில் நமக்கு பிடித்த எதிர்வாதம் புரியாத பொருளை நண்பர்களாக வரித்துக்கொள்வோம்.சிலருக்கு மரப்பாச்சி,சிலருக்கு கடவுள்,சிலருக்கு இறந்துபோன உறவுகள்,சிலருக்கு கற்பனை கதாபாத்திரங்கள்.இயக்குநர் ஸ்பீல்பெர்க்குக்கு ஒரு அயல்கிரகவாசி.சிறுவனாக வரும் எலியட்டின் கதாபாத்திரத்தில்கூட ஸ்பீலின் குணாதசியம் தெரிவதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. எலியட்டின் தங்கையாக வரும் சிறுமி யாரிடம் எதை சொல்லக்கூடாதோ அதை மிகச் சரியாகத் செய்கிறாள்.துடுக்குத்தனம் நிறைந்த சிறுமி.அவளது முகபாவங்கள் கொஞ்சுதற்குரியவை.படத்தில் புன்னகை வரும் இடங்களில் இவள் கட்டாயம் இருப்பாள்.மூத்தவன் பொறுப்பு நிறைந்தவன்,தாய் அழும்போது தம்பியிடம் , “நீ ஏன் கொஞ்சம் முதிர்ச்சியோடு அனைவரையும் புரிந்து கொள்ள முயற்சிக்கக்கூடாது?” என சீறுபவன்.தமிழ் சினிமா காவலர்கள் போல் கட்டகடைசியில் வீட்டிலேயே வலம்வரும் ஈடியை அறிந்துகொள்ளும் அன்னை.ஈடி இந்த குடும்பத்தில் பிரவேசிப்பதும், அவர்களுடன் நட்பு உருவாக்குவதும்,பிரியும்போது கசியும் ஈரமும்தான் படம்.

             சிறுவனுக்கு அயல்கிரகவாசியை பார்த்ததும் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டாலும் அதுவும் அவனைக்கண்டு பயப்படவே அதைத் தேடத் தொடங்குகிறான்.கிடைத்ததும் அனைத்தையும் பகிரத்தொடங்குகிறான்.ஈடியை அனைவரையும் விட சரியாக புரிந்துகொள்பவன் இவனே.             உண்மையில் தனிமையை உணர்ந்தவர்களாலேயே மற்றவர்களின் துயரத்தில் தன்னை பொறுத்திக்கொள்ள முடியும்.ஈடிக்கும்,எலியட்டுக்கும் உள்ள தொடர்பு தெரியவரும்போது ஆய்வாளர், “You say Elliot thinks his thoughts?” என கேட்கிறார்.அதற்கு அவன் அண்ணன், “No He feels his feelings”, என்கிறான்.சிந்தனைகளுக்கும்,உணர்வுகளுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் புரிகிறது.

            படத்தின் மிகப்பெரிய வெற்றி ஒரு மனிதனின் பாவனைகள்போல் ஈடியின் பாவனைகளும் நம்மை ஆக்கிரமிப்பது.அதற்கு வலிக்கும்போது நமக்கும் வலிக்கிறது.உருவத்தில் அளவில் நிறத்தில் நம்மோடு வேறுபடும் ஈடியை பெரியவர்களைவிட சிறுவர்களாலேயே நெருக்கமாக உணர முடிகிறது.வயதானால் சந்தேகம் வலுக்கிறது.ஆராயத் தோன்றுகிறது.ஈடியோடு எளிமையாக நட்பு பாரட்ட முடிகிறது சிறுவர்களோடு, வளர்ந்தவர்களுக்கு மட்டுமே ஆராய்ச்சி செய்ய மனம் வருகிறது.ஈடிக்காக தான் பத்து வயதிலிருந்து காத்திருப்பதாக சொல்லும் உளவுத்துறை அதிகாரி காரியத்தால் எலியட்டோடு முரண்படுகிறார்.எலியட்டின் காத்திருப்பு நட்பைக் கோருகிறது,அதிகாரிக்கோ சாதனை,ஆராய்ச்சி,பைத்தியக்காரத்தனம்.

           ஈடி வார்த்தைகள் கற்றுக்கொள்கிறது.மொத்தமே ஐந்துக்கும் குறைவான வார்த்தைகள், மனிதகுலத்திற்கு அவசியமான உபயோகப்படுத்தினால் அநாவசிய விவாதங்கள் குறையும் வார்த்தைகள்,படத்தின் இறுதிக்காட்சிகளில் அவை உபயோகப்படும்போது அழுத்தம் கூடுகிறது.வலியை உணரும்போது ஈடி சொல்லும் “ஔச்” இறுதியில் பிரியும்போதும் வருகிறது “ஔச்”.படத்தின் பின்னணி இசையும்,ஒளிப்பதிவும் பக்கா.இறுதியில் சைக்கிளில் சிறுவர்கள் செல்லும் காட்சியின் பின்னணி இசை ஸ்பீலுக்கு மிகவும் பிடித்திருந்ததால் இசைக்கேற்ப காட்சியை நீளப்படுத்திக்கொண்டாராம்.அதிரும் பின்னணி இசையில் ஆரஞ்சு சூரியன் முன்னே இறங்கும் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் யம கிங்கரர்களை நினைவூட்டுகிறார்கள்.

         படத்தில் வரும் சைக்கிள்கள் கார்களை முந்துகின்றன.முடியுமாவென யோசித்தால் சைக்கிள்களால் கார்களை முந்த முடியாதென்னும் நினைப்புதான் நம்மில் பலரின் வாழ்நாள் அலுப்புக்கு காரணமென தோன்றுகிறது.இதில் வரும் காற்றில் பறத்தலும்,பறக்க வைத்தலும் சாத்தியமே - magnetic levitation,telekinesis.மனிதனின் விஞ்ஞானம் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே எல்லைகளுக்குள் திரிவது.இன்று நம்பமுடியாத ஒன்றுக்கு நாளை தேற்றங்கள் எழுதப்படலாம்,அதில் கடவுளும் ஒன்றாக இருக்கலாம்.ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் என்பதைக்காட்டிலும் இந்த படம் சாரு சொன்ன “வாழ்வியல் தரிசனம்” என உணர்கிறேன்.எல்லா இடத்திலும் இருக்கும் தனித்திருப்பவனின் மீதான கேள்விகள்,கல்லெறிதல்களின் ஒரு பிரதியெனவே இப்படத்தைப் பார்க்கிறேன்.முடிவில் ஈடிக்கு சிறுமி முத்தமிடுகிறாள்,நமக்கும் முத்தமிடத் தோன்றுகிறது,ஈடி சொல்கிறது, “Be good”.சிறுவன் வானம் பார்க்கிறான்.பல காட்சிகளில் துளிர்த்த நம் கண்ணீரோடு படம் நிறைவடைகிறது.

       இந்த படத்தைப்பற்றி இன்னும் விட்டால்கூட சொல்லிக்கொண்டேயிருப்பேன்.உங்கள் வேலை கெட்டுவிடும்,போய் படத்தைப்பாருங்கள்!

       கண்டுபிடிப்பு- கில்லி பொம்மைகளுக்கு மத்தியில் த்ரிஷா இருக்கும் காட்சி இந்த படத்திலிருந்து சுட்டது.

        நினைவூட்டல்-அஞ்சலி படத்தின் “வேகம் வேகம்” பாடலை மணிரத்னம் இந்த திரைப்படத்திற்கு மரியாதை செய்யும் விதமாய் அதைப்போலவே எடுத்திருப்பதாக சொல்கிறார்.

       தகவல்- விக்கிதான் வேறாரு?!

January 14, 2011

Ouch-ET-Phone-Home

Filed under: Uncategorized — royalblacksandy @ 6:02 pm

         ஆனந்த விகடனில் செழியன் எழுதிய உலக சினிமா மிகப் பிடித்திருந்தது.கற்றதும் பெற்றதும்,ஒ பக்கங்களுக்கு அடுத்து விரும்பி படித்த தொடர்கட்டுரைகள் அவை.அதில் அவர் நிறைய படங்களை பற்றி எழுதியிருந்தாலும் எனக்கு கொஞ்சம் என் ரேஞ்சுக்கு தோன்றியவை E.T: Extra Terrestrial-உம்,The birds-உம்.இரண்டாவது தரவிறக்க கிடைக்காததால் முன்னதையே தேர்ந்தெடுத்தேன்.

        அயல்கிரகவாசிகள் என்றால் நிசத்திலும் கிரகம் பிடித்தவர்களாயிருப்பர் போன்ற கற்பனைகளே மிகுதி.ஒரு பரந்த காட்டில் சில அயல்கிரகவாசிகள் தாவரமாதிரிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.நெருப்பில் தீய்ந்தாற்போல் வழவழத்து இறுகிப்போன தோலுடைய நீளமான கைகள் காட்டப்படுகின்றன.மோப்பம் பிடித்து மனிதர்கள் வந்துவிட அவசர அவசரமாக கூன் விழுந்த மனிதர்கள் விண்கலத்தில் நுழைந்து கிளம்புகிறார்கள், ஒரே ஒரு கிரகவாசியை மட்டும் விட்டுவிட்டு.வீடு(?) திரும்ப எந்த நம்பிக்கையுமில்லை,அதைவிட சுற்றிலும் மனிதர்கள்.அழும் குழந்தையைப்போல் விண்கலத்தை பார்த்தவாறு ஓடுகிறது.அங்கே ஒரு வீட்டில் அண்ணன் மற்றும் அவன் நண்பர்களால் சீண்டப்படும் சிறுவன்.(ஒப்புக்கு சப்பாணியாக இருந்திருக்கிறீர்களா?சின்ன வயதில் என்னைவிட வயதில் மூத்த அக்கா அண்ணன்கள், விளையாட்டில் சேரும்போது சொல்வார்கள்,ஹேய் நீ OPனு, இந்த பையனும் கிட்டத்தட்ட அதேமாதிரிதான்).வரவழைத்திருந்த பிட்சாவை வாங்க அவன் வாசலுக்குப்போகும் நேரம் தட்டுமுட்டு சாமான்கள் நிறைந்த ரூமிலிருந்து ஏதோ சத்தம்,கையிலிருந்த பந்தை அவன் எறிய அது திருப்பி எறிகிறது.அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறான்.அம்மா,அண்ணன் அண்ட் கோ வரும்போது அங்கே அது இல்லை.குழப்பத்தோடு நகர்கிறான் சிறுவன் எலியட்.அனைவரும் உறங்கியபின்னர் அதன் பாதச்சுவடுகள் பின்னர் போகிறான்.இருவரும் சந்திக்கும் நேரம் அதுவும் அவனைப்பார்த்து கிறீச்சிடுகிறது.அவனும் அலற தெறிக்க ஓடி மறைகிறது.அவன் அதை வீட்டுக்கு வரவழைக்க சின்ன வயதில் கேட்ட கதைகளைப்போல் ஜெம்ஸ் போன்ற ஏதோவொன்றைத் தூவிக்கொண்டே வருகிறான்.அதுவும் வருகிறது.அவனது செய்கைகளையே அதுவும் திருப்பி செய்கிறது.அந்த கணத்தில்தான் இருவரும் நண்பர்களாகிறார்களா தெரியவில்லை.அவர்களுக்கு என்ன நடந்தது,அந்த மனித கூட்டத்திடம் அது பிடிபட்டதா?உருக்கமான காட்சிகள் படத்தில்.

     படத்தில் வசனம் அதிகம் இல்லை.வரும் சில வசனங்களும் முடிவில் உபயோகப்பட்டு நெகிழ்ச்சியடையச்  செய்கிறது.அதுவும் “Ouch” என வரும் வசனம் ஒன்று போதும்.எலியட்டின் தங்கையோடு இருக்கும்போது வார்த்தைகளை அது கற்றுக்கொள்வதும்,அம்மா செண்டிமெண்ட்டுக்கு எலியட்டின் தாயை முதன்முதலில் பார்க்கும்போது, “mom” என்பதும் அழகு.அழுத்தமான புன்னகைக்கு சில இடங்களும் உள்ளன,ஈடிக்கு சிறுமி பெண் வேடம் போட்டுவிடுவது உதாரணம்.குள்ளமாக,எலாஸ்டிக் கழுத்துடன் பெரிய கண்களைப் போட்டுக்கொண்டு ஈடி பார்க்கும்போது தூக்கிக்கொண்டு வந்துவிடலாம்போல்,அள்ளியணைத்து முத்தம் வைக்கலாம்போல் இருக்கிறது.ஈடியும்,எலியட்டும் பறக்கும் காட்சி நமக்கும் சிலிர்ப்பூட்டுகிறது.இதில் வரும் காற்றில் பறத்தலும்,பறக்க வைத்தலும் சாத்தியமே - magnetic levitation,telekinesis. (wikipedia!) மனிதனின் விஞ்ஞானம் எல்லைகளை விரிவுபடி]டுத்திக்கொண்டே எல்லைகளுக்குள் திரிவது.இன்று நம்பமுடியாத ஒன்றுக்கு நாளை தேற்றங்கள் எழுதப்படலாம்,அதில் கடவுளும் ஒன்றாக இருக்கலாம்.

          பலரது பால்யத்திலும் ஒரு ரகசிய சினேகம் இருக்கும்.ஏதேனும் பிடித்த எதிர்வினை புரியாத பொருளை நண்பனாக வரித்துக்கொள்வார்கள்.சிலருக்கு மரப்பாச்சி,சிலருக்கு வீடியோ கேம்ஸ் கேரக்டர்,சிலருக்கு டைரி,சிலருக்கு புத்தக பாத்திரங்கள்…அப்படி ஸ்பீல்பெர்கிற்கு இள வயதில் இருந்த கற்பனை நட்புதான் ஈடி எடுக்கக் காரணம் என்கின்றனர்.இள வயதில் தாய் தந்தையரை பிரிந்து ஸ்பீல்பெர்க் வாழ்ந்த அந்த தனிமை நிறைந்த வாழ்க்கையையே எலியட்டும் வாழ்கிறான்.சாரு கூறும், “சயன்ஸ் ஃபிக்‌ஷன் எடுப்பதற்கு வாழ்வு பற்றிய ஒரு தரிசனம் (vision) இருக்க வேண்டும்” என்பது படம் முடிந்ததும் புரிகிறது.மனிதன் மட்டுமே எல்லா அழிவுக்கும் காரணம் எனத் தோன்றுகிறது.நம்மிலிருந்து வேறுபட்ட எதையும் சந்தேகிக்கவே நமக்குத் தெரியும்,அப்படி கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.அதிகம் லட்சியமில்லாத,இயல்பான வலிகளை உணரும்,அறிவியலுக்காக அன்பை அறுக்காத  குழந்தைகளால் மட்டுமே உணரக்கூடிய விஷயம் ஈடி.

          சாதாரணமாக கொஞ்சம் உருக்கமான படம் பார்த்தாலே அழும் நான், இந்த படத்தின் பல காட்சிகளுக்கும் கண்கள் கலங்கினேன்.நான் மட்டுமல்ல,இளவரசி டயானா கூட கண்கலங்கியதாக ஊடகங்கள் சொல்கின்றன(நான் எதுவும் சொல்ல வரவில்லை).இதில்  ஈடி பொம்மைக்கு நடுவில் ஒளிந்திருக்கும் காட்சிதான் கில்லி படத்தில் த்ரிஷா பொம்மைக்கு நடுவில் ஒளிந்திருப்பதாக வருகிறது.

         படம் என்று சொன்னால்போதாது அற்புதம் என்றே சொல்லவேண்டும்.என்ன பேசி என்ன, என்ன சொல்லி என்ன,இந்த படத்தைப் பார்த்ததும் எனக்குப் பட்டதை வார்த்தையில் சொல்லமுடியவில்லையே!

         இறுதியில் ஈடி எலியட்டிடம் “I ll be right here”,என்பது நமக்கும் சேர்த்துதானே?

          ஈடி இனி என் வாழ்வுக்குமான என் செல்லம் :)

December 29, 2010

என்ன நான் சொல்றது?!?!

Filed under: Uncategorized — royalblacksandy @ 1:30 pm

ஏற்கெனவே இரு பெண்கள் அமர்ந்திருந்த காலியான பேருந்தின் இருக்கையில் மூன்றாவதாக அமர வந்த அங்கிளிடம் சங்கடத்தைத் தவிர்க்க அங்க இடமிருக்கு என ஒரு பையனுக்கு பக்கத்து சீட்டைக் காண்பித்தேன்.“நான் ஸ்கூல் மாஸ்டர்,என்கிட்ட உன்னமாதிரி எவ்ளோ பொண்ணுங்க படிக்கிறாங்க,ஒருத்தர்கூட இப்படி சொன்னதில்ல..” ஃபீல் பண்ணித் தள்ளிவிட்டார். ## இது எனக்கு தேவயா? ஓவர்.

எடைக்கு எடை போட்டாகூட 70க்குமேல் தேறாத உனக்குப்போய் 100 பவுன் கேட்கிறாள் உன் அன்னை.என்ன ஏதென்று விசாரித்தால் செய்கூலி சேதாரமாம்.

எழுதி முடிக்கும்முன் யாரேனும் எட்டிப் பார்த்தால் கூச்சமாகவும் அசர்ந்தப்பமாகவும் இருக்கிறது அலங்காரம் முடிக்காத ஆண்டுவிழா சிறுமி போல.

நேற்று ஓடும் பேருந்தில் பள்ளி மாணவன் ஏற முடியாமல் தவறவிட்டான். விடாமல் அரை கிலோமீட்டர் ஓடி வந்தவனைப் பார்த்துவிட்டு “டிரைவர் வண்டிய நிறுத்தப்பா” என்று சொன்ன நல்லமனசுக்கு நன்றி. ## நல்லார் ஒருவர்.

ஸ்மைலிகளால் நிரம்பியிருந்தது என் வாழ்வு.அதற்கப்புறம் அந்த கடைசிக் குறுஞ்செய்தியை அனுப்பினாய். ## நான் booster போடுவதையே நிறுத்திவிட்டேன்.

ஓகே ஓகே என மட்டுமே மாறிமாறி பரிமாறிக்கொண்ட குறுந்தகவல்கள் நாம் ஓகேயில்லையென சொல்லாமல் சொல்லின.

கறுப்புப்பணம்,கறுப்பாடு,கறும்புள்ளி என பெயர் வைத்தது எல்லாமே நிறவெறியின் குறியீடுகளா? ## எங்கேயோ கேட்டது..

பொத்தேரி இரயில் நிறுத்தத்தில் மகளிர் பெட்டியில் ஓடிவந்து ஒருத்தர் ஒரு பெண்ணை திட்டி அடித்துவிட்டுப் போனார்.நானும் எதிரிருக்கைப் பெண்ணும் தடுக்கவா பிடிக்கவா என புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தோம்.அந்த பெண் நிதானமாய் “எங்கூட்டுக்காரர்தான்,சொல்லாமலே இந்த பெட்டில ஏறிட்டேன்,அதான் தொலச்சிட்டு தவிச்சிப்போய் கண்டதும் அடிச்சிப்புட்டாரு” ## வெள்ளந்தித் தனமும் வெறித்தனமும்

என்ன சொல்லியும் உனக்குப் புரியப் போவதில்லை…புரியும்படி சொல்லவும் எனக்கு தெரிவதில்லை.. முடிவு உன்கையில்தான் என எனக்கு புரியாமலில்லை ## HCM Performance document

புரியவில்லையென ஆஜர் ஆகி நான் இடும் பின்னூட்டத்திற்குப் பிறகு சிலாகித்து எழுதப்படும் பின்னூட்டங்கள் சொல்கின்றன மூளை மழுங்கிவிட்டதென ## தீயா யோசிக்கணும் சந்தியா..

பேசாமல் இந்த வேலையைவிட்டு வெளிநாடு போய் கைநிறைய சம்பாரிச்சி கால்மேல் கால்போட்டு ஓய்வு நேரத்தில் ப்லொக் போடலாமென்றிருக்கிறேன் ##கலாம் கேட்டுக் கொண்டதால் சும்மாயிருக்கிறேன்.

உள்ளூரில் இருந்தவரை தீபாவளியன்னிக்கு காலை பட்டிமன்றம் பார்த்து மட்டுமே கொண்டாடியவர்கள், அயல்நாடு போய் thanksgiving photos என்று பேஸ்புக்கில் போடும்போது உண்டாகும் உணர்வு வயிற்றெரிச்சலா பொறாமையா பரிதாபமா ?

ஒருவார காலம் தூக்கத்தை கெடுத்துக்கொண்டு vinavu.com, maamallan.com and charuonline.com படித்தது ஏககாலத்தில் சன் மற்றும் ஜெயா மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்ததுபோல் இருந்தது.நல்ல பிள்ளையாய் மீண்டும் ch1 மட்டுமே படிக்கப் போகிறேன்.

December 4, 2010

வேலிக்கு பின்னுள்ள வெளிகள்

Filed under: Life — royalblacksandy @ 5:29 am
 
தான் படித்த மனோதத்துவத்தை
என்னிடம் காட்டினாள் தோழி.
பேப்பரையும் பென்சிலையும் தந்தாள்,
இதுவரை கற்றதை மறந்து போ என்றாள்.
பெரிதாக ஏதும் கற்காதலால்
மறத்தல் எளிதாக இருந்தது.
முதல்முறை பென்சில் எடுக்க நேர்ந்தால்
என்ன கிறுக்குவாயோ அதை கிறுக்கு என்றாள்,
ஆண்குழந்தைகள் கோடுகள் போடுவார்கள்
அதிகார மனோபாவம்,
பெண்குழந்தைகள் வட்டம் போடுவார்கள்
அடங்கிக்கொள்ளும் மனோபாவம்,
விளக்கியவாறே என் கிறுக்கலை பார்த்தாள்
சுதந்திரமாய் கோடுகள் போட்டுவிட்டு
குறுக்கே வேலிக் கோடுகள் போட்டிருந்தேன் நான்.
சொல்ல ஏதுமில்லையென கை விரித்தாள்.
 
 
 
 

November 20, 2010

சாகற சமயத்துல…

Filed under: Life — royalblacksandy @ 3:20 pm

 இழவு விழுந்த வீடு

பெருங்குரலெடுத்து அழுதவர்களும்,
அழுதழுது ஓய்ந்தவர்களும்,
ஒய்ந்தவர்களுக்கு காபி கலந்தவர்களும்
காபி கலந்து சலித்தவர்களும்
கலகலக்கச் செய்திருந்தனர் சாவு வீட்டை.
வெறிக்க வெறிக்க பார்த்திருந்தேன்
நான் மட்டும் எல்லாவற்றையும்.
ஒரு சாபம் போல பிரிய மறுத்தன
விழியை விட்டு உப்பு நீரும்
உதட்டை விட்டு ஓலங்களும்.
புருசனை இழந்த தூரத்து அத்தையின்
பார்வை அப்போதும் என் மேல் ஊர்ந்தது.
நாளை என் சாவில் அத்தை
எப்படி அழுவாள்?
கோள் சொல்லி திட்டலாம்
ஊசி தைத்த மனதோடு
உதாசீனப்படுத்தலாம்.
இல்லை என்னை மன்னித்து
கண்ணீரால் கழுவலாம்.
பிணத்தை எடுத்ததும் ஏனோ தோன்றியது,
அறியாத வயசென்றால்
எளிதாக அழ வாய்த்திருக்கும்
எச்சிலைத் தொட்டேனும்.

அரசக்கட்டளை

நான் மரித்ததும் என்னை புதைக்காதீர்கள்
நாடு முழுக்க என்  சாம்பலை தூவுங்கள்
ஏழை எளியோருடன் அது ஒன்றாகட்டும்
சொல்லிவிட்டு செத்துப்போனார்
எல்லோருக்கும் பிடித்தவர்.
எவனும் கேட்கவில்லை
செத்தப்பறம் உனக்கென்ன கவலை அதைப்பற்றியென.

November 3, 2010

பிறந்த நாள் வாழ்த்துகள்

Filed under: Personal — royalblacksandy @ 5:45 am
Tags: , ,

என்னை கிண்டலடித்தவனை அண்ணனிடம் போட்டுக்கொடுத்தால்
அவனே தேவலாம்போல அப்படி கலாய்க்கிறான்.
அடிக்க கையோங்குகையில் கத்துகிறான்
“உன் மகளை மடியில வச்சி
காதுகுத்தும்போது கிள்ளுறேன் பாரு”
நான் மட்டுமென்ன சளைத்தவளா!
“போடா மூணாவது முடிச்சு போடுறப்போ உன்
பொண்டாட்டி சவுரிய பிடிச்சு இழுக்கலேன்னா கேளு”
சாவித்திரிகளும் சிவாஜிகணேசன்களும் திகிலானார்கள்.
————————————————-
பிரெண்ட்ஸ் படத்தை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் சொன்னேன்
“டேய் அண்ணா.. உன் பிரெண்ட் கூட ஸ்மார்ட் ஆ இருக்கான்டா “
கொஞ்சம் கூட யோசிக்காமல் சொல்கிறான் “செருப்பு பிஞ்சிரும்”
“உனக்கு மாப்ளைய நாங்க பாப்போம் நீ படிக்கிற வேலைய மட்டும் பாரு”
“எப்படி பட்ட மாப்ளே பாப்படா?” ஆர்வமாய் கேட்டால்,
“என் தங்கச்சிக்கு ஏத்த லூசுப்பயல தேட எனக்கு தெரியாதா?”
சொல்லிவிட்டு பரதேசம் போய்விட்டாய்.
இன்னும் லூசுப்பயல் வந்துசேரவில்லை.
அண்ணனிடம் யாரேனும் நினைவூட்டினால் தேவலை.
————————————————-
அதிகம் ஊட்டி செல்லம் கொடுப்பாள் அன்னை
அதிகம் பணம் திணித்து செல்லம் கொடுப்பார் தந்தை
அதிகம் சண்டை போட்டு செல்லம் கொடுப்பன் அண்ணன்
அண்ணனிடம் சண்டை போடும் தருணத்தை விட
அமைதியாயிருந்த தருணங்களே ரணம் தருகின்றன.
————————————————-
சின்ன வயதில் அஞ்சலி படம் பார்த்துவிட்டு அண்ணனென்றால் எனக்கு அப்படியோர் ஆசை.
எனக்கும் ஒரு அண்ணனிருந்து “டேய் அண்ணா” என அழைக்க வேண்டும், அவனிடம் சண்டை போட வேண்டும்,கிரிக்கெட் கற்றுக்கொள்ள வேண்டும் etc  etc
ஆனால் அதுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.அப்புறம் வந்தான் என் அண்ணன், தோழனாக வந்தவன்,அக்கறையாலே அண்ணன் ஆனான்.அவனை நேரெதிரில் அண்ணன் என்று அழைத்த கணங்கள் மிகக்குறைவு, ஆனால் எல்லோரிடமும் அண்ணன் அண்ணன் என்று வாய் நிறைய சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வேன்.நான் தப்பு செய்யும்போது தலையை பிய்த்துக் கொள்ளாத குறையாக ரீடைரக்ட் செய்யப் பார்ப்பான்.என் எழுதும் பழக்கம் நாலு பேருக்கு தெரிய முக்கியக்காரணம் அவன், culturals  head  இடம் சண்டைபோட்டு வாய்ப்பு வாங்கிக்கொடுத்தான். என் முதல் பெரிய வெற்றியின்போது பக்கத்தில் இருந்து பெருமைப்பட்டவன்.என் சின்ன சறுக்கல்களையும் அழகாக புரிந்துகொண்டு ஆறுதல் சொல்பவன்.அண்ணா..அடுத்த பிறவியில் நான் உனக்கு உண்மையிலேயே தங்கையாய் பிறக்க வேண்டும்,அதுவும் ஒற்றை தங்கையாய் பிறக்க வேண்டும்.Happy Birthday Anna :)

October 31, 2010

குளிர்சாதனப் பேருந்தில்!

Filed under: Uncategorized — royalblacksandy @ 4:59 pm

காலை குளிர் சாதனப்பேருந்தில்
கடைசி இருக்கையோரம் அமர்ந்து
அனைவரையும் கண்காணித்திருந்தேன்.
இரண்டாம் நிறுத்தத்தில்
கருப்பாய் உயரமாய் பளிச்சென ஏறினான்
இருவரின் கண்களும் மோதிக்கொண்டன.
உடனே தோழிக்கு குறுந்தகவல் அனுப்பினேன்
இரண்டாம் முறையாக கண்கள் சந்தித்தன
அவசர அவசரமாக மீண்டும் திரும்பினோம் இருவருமே.
ஐந்நூறு ருபாய் நோட்டைக்கொடுத்து
நடத்துனரிடம் திட்டு வாங்கிக்கொண்டான்
எனக்கு சிரிப்பில் புரையேறி கன்னம் விரிந்தது
பக்கத்து இருக்கை பயணி சந்தேகமாய் பார்த்தார்
இருமுவதாய் எவ்வளவு நேரம் நடிப்பது.
இப்போது சின்ன வெட்கம் அவனிடம்
ஆண்கள் வெட்கப்படுவதும் அழகாய்த்தான் இருக்கிறது.
அவனது புன்னகையுடன் கூடிய பார்வையை உணர முடிந்தது
எங்கள் பார்வைகள் அடிக்கடி இப்போது சகஜமாய்.
இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது.
கண்பார்வை கையசைக்க இறங்கி நடந்தேன்.
அந்த நாள் முழுக்க அழகாக இருந்தது

இன்ஸ்டன்ட் போதி மரம்

Filed under: Life — royalblacksandy @ 4:02 pm

ஆழ்ந்து உறங்கும் நள்ளிரவில்

மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

அவசர வேலையாக செல்லும் நாளொன்றில்

காத்திருக்கவேண்டியிருக்கிறது

மின்சாரரயில் கடக்கும்வரை.

வீடு கிளம்ப எத்தனிக்கும்போது வருகிறது

அபாயம் தாங்கிய மின்னஞ்சல்.

எதிர்ப்பார்க்கப்பட்ட விசேஷமொன்று

தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்படுகிறது

அதிக கட்டண கொடுத்து செல்லும் குளிர்சாதனப்பேருந்தொன்றில்

அடுத்தமர்கிறான் தூங்கி வழியும் பிருகஸ்பதி.

எப்போது மேலே விழுவானெனெ தெரியாமல்

சங்கடப்படுவதே வாழ்க்கையென

அப்போதுதான் பழகத்தொடங்குகிறது வாழ்க்கை.

October 30, 2010

கொலை செய்த விருப்பங்கள்

Filed under: Feelings — royalblacksandy @ 4:10 pm
Tags: ,

பதிலளிக்கப்படாத குறுந்தகவல் ஒன்று

பத்திரமாக சேமிக்கபடுகிறது.

புரியததாக நடிக்கவும் முடியாது

பிடித்ததாக ஒப்புக்கொள்ளவும் இயலாது.

நம்பிக்கையளித்தால் ஏமாற்றியதாக அர்த்தம்

உறவை துண்டித்தால் நட்பை முறித்ததாக ஓலம்.

எதிரெதிர் நாற்காலியில் அமர்ந்த ஒர் நாள்

பீடித்த அமானுஷ்யம் விலகியபோது

வசியம் வைத்ததாக உணர்கிறேன்.

முடிவில்லாமல் நீண்ட மின்னஞ்சல் தொடருக்கு

பொழுதை நோவதா வயதை நோவதா

குழம்பிக்கொண்டிருக்கிறது மனசாட்சி.

சொல்லிவிட வேண்டும் என நீயும்

தப்பிக்கவேண்டும் என நானும்

பிரார்த்தித்தால் எங்கே போவார் ஒற்றைக்கடவுள்?

Next Page »

Theme: Rubric. Blog at WordPress.com.

Follow

Get every new post delivered to your Inbox.