வரவு அஞ்சு லட்சம் செலவு ஐநூறு உயிர்
புதுபோட் வாங்கினதுக்கு ஒரு லட்சம்
மூணு மாசத்தில் அறுந்த வலைகளுக்கு
மொத்த செலவு அம்பதாயிரம்
பெரியக்கா கல்யாணக் கடன் ரெண்டு லட்சம்
ரெண்டு பேருக்கும் கான்வண்ட் ஸ்கூல் பீஸ் எட்டாயிரம்
போட்டோக்கு மாலை போட்ட பெரிய மனுசங்களுக்கு
கறிசோறு ரெண்டாயிரம்,காபி டீ ஐநூறு
கலைஞர் டிவி கேபிளுக்கு மாசம் இருநூறு
பட்டியல் வளர்ந்துகொண்டே இருந்தது
“கருவாட்டை கொண்டுபோய் விக்க சொன்னேன்ல”
அம்மா கோவத்துடன் முதுகில் அடித்ததில்
நழுவி விழுந்த பென்சில் ரெண்டாய் உடைந்தது
அப்பா அடிக்கடி சொல்வாரு தலையிலடிச்சிகிட்டே
“இந்த தொழிலுக்கு வராதீங்கடா படிச்சி வேலக்கி போங்க”
ஹ்ம்ம் அவரு அங்கேருந்து பாப்பாரா?
முணுமுணுத்துக் கொண்டே கூடையை தூக்கியவள்
உடைஞ்ச பென்சிலுக்கு அஞ்சு ருபாய் சேர்க்கவே இல்லை.
.
வானவில்லில் சாயம் வெளுத்திருந்தது
கவிஞன் எழுதினான் நீல வான ஓடை
தலைவர்கள் சொன்னாங்க கருப்பு சரித்திரம்
ரேஷன் அரிசியோ பழுப்பு மஞ்சள்
தரைய ஒதைச்சு அழுத கால்கள் கொஞ்சம் சிவப்பு
மௌனமா பாக்கும் சாமிகளோ காவி உடுத்திருக்கு
இந்தியனோட இறையாண்மை நிறமில்லாம படுத்திருக்கு
பச்சை தமிழனோட சவம் மட்டும் தனிச்சிருக்கு
அவன் நட்பு மீனும் செத்து வாய திறந்திருக்கு.
ஒரு வேண்டுகோள்:
இதெல்லாம் செய்தால் நிலைமை திருந்திவிடுமா என்பவர்கள் முதலில் இது புரட்சி அல்ல தகவல் பரிமாற்றம்,மௌன எதிர்ப்பு என புரிந்து கொள்ள வேண்டும்..நமது மௌனம் மட்டுமே இவர்களை எதை பற்றியும் சிந்திக்காமல் சுயசேவை செய்ய வைக்கிறது.உங்கள் குடும்பத்தார்க்கு சொல்லுங்கள் இதுவரை 500 பேர் உயிரிழந்தனரென்று.நேரம் இருந்தால் ஒரு அரை நொடி அந்த பெட்டிஷனில் கையெழுத்திடுங்கள்.இப்போது சமூக வலைப்பக்கங்களில் நடப்பது ஆரோக்கியமானது.முடிந்தால் உங்கள் (fb,twitter,orkut,blog) வலைப்பக்க ஸ்டேட்டசில் இது தொடர்பான செய்தி தந்து தெரியாதவர்களுக்கு பகிருங்கள்.எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் மீனவ மரணங்களை, ஆட்சியாளர்கள் அறியட்டும் நாம் வெறுக்கிறோம் என.செய்திகளில் இதற்கு மீடியா போதிய முக்கியத்துவம் அளிக்காததால் நாமே இதை செய்தியாக்கும் விஷயம். செய்தி என்றால் கெட்டவார்த்தை போன்ற தோற்றத்தை துடைத்து தெரியவேண்டியதை செய்தியாக்குவோம்
